நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை-கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை


நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை-கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை
x

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல்

நாமக்கல்:

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் விடுதி

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து, அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின்படி 2 ஆண்டு காலம் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

உரிமம் ரத்து

இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Next Story