பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.
ராமநாதபுரம்
பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று காலை கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி கோவிந்தராஜலு கூட்ட அரங்கிற்கு வந்தார். அப்போது விவசாயிகள் அனைவரும் எழுந்து கலெக்டர் வராமல் கூட்டம் நடத்தக்கூடாது. மாவட்டத்தில் வறட்சி நிவாரணம், பயிர்காப்பீடு தொடர்பாக கலெக்டர் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி கலெக்டர் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என கூறினார். அப்போது விவசாயிகள் கலெக்டர் வரும்வரை காத்திருப்பதாக தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கலெக்டர் கூட்ட அரங்கிற்கு வந்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கோவிந்தராஜலு, விவசாய இணை இயக்குனர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, கூட்டுறவு இணை பதிவாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் வறட்சி நிவாரணம் ஏன் இதுவரை வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தவில்லை என கூறினர்.
பயிர்களுக்கு நிவாரணம்
இதற்கு பதிலளித்த கலெக்டர் கூறியதாவது:- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்யாததால் மாவட்டத்தில் 98, 354 எக்ேடர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.132.7 கோடி நிவாரணமாக வழங்க கேட்டுள்ளோம். வருவாய்த்துறையில் இருந்து நிதித்துறைக்கு அதற்கான அறிக்கை சென்றுள்ளது.
ராமநாதபுரம் மட்டுமல்லாமல் பல வறட்சி பகுதிகளுக்கும் சேர்த்து நிவாரணம் அறிவிக்க உள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. பயிர்காப்பீடு பொறுத்தவரை நெல்அறுவடை பரிசோதனை அறிக்கை அனுப்பப்பட்டு ஆய்வு பணிகள் முடிவடைந்துவிட்டது. தமிழகத்திலேயே பயிர்பாதிப்பு கணக்கெடுப்பு நடத்தி முடித்ததும், அதற்கான விவரங்களை அனுப்பியதும் முதலில் ராமநாதபுரம் தான். அதனால் விவசாயிகள் நிவாரணம் பெற தேவையான பணிகளை செய்து வருகிறேன்.
புதிய வகை நெல்
பயிர்காப்பீடு தொகை ஜூலை இறுதி அல்லது ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் தெலுங்கானாவில் இருந்து வந்துள்ள புதிய வகை நெல் விதை வறட்சியை தாங்கி குட்டையாக வளர்ந்து நல்ல விளைச்சலை தருகிறது. இந்த மாவட்டத்திற்கு அது பயன் உள்ளதாக இருக்கும் என்பதால் அதனை பரிசீலனை செய்து விவசாயிகள் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.