கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை


கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பயன்பாட்டில் உள்ள கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றும் பணியாளர்களுக்கு சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் கலந்து கொண்டு பேசியதாவது, தமிழ்நாடு கசடு கழிவுகள் மற்றும் கழிவுநீரை அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டுகள் செல்லும் வாகன உரிமம் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான உரிம கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும். உரிமம் பெற்றவரை தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள் மற்றும் கழிவுநீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் இல்லாமல் மனித கழிவுகளை அகற்ற கூடாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பணிகள் நடைபெற வேண்டும். மனித கழிவுகளை அகற்ற உரிமம் பெற்ற வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மாநகராட்சி விதிகளை சரியான முறையில் கடைபிடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதே குற்றத்தை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story