12 டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடவடிக்கை
12 டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடவடிக்கை
கூடுதல் விலைக்கு மதுவிற்ற 12 டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாணிப கழக மாவட்ட மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வுக்குழு
நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் சென்னை, தமிழ்நாடு மாநில வாணிப கழக தலைமை அலுவலகம், திருச்சி மண்டல முதுநிலை மேலாளர், வருவாய் அலுவலர் ஆகியோரின் உத்தரவின் பேரில் நாகை மாவட்ட வாணிப கழக மேலாளர் சவுந்தரபாண்டியன் தலைமையில் அரசு நிர்ணயித்த அடக்க விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதை கண்டறிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
12 டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடவடிக்கை
இந்த குழுவினர் ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான கடைகளில் நேற்றுமுன்தினம் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் 7 கடைகளிலும், நாகை மாவட்டத்தில் இயங்கி வரும் 5 கடைகளிலும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அந்த கடைகளில் அரசு நிர்ணயித்த அடக்க விலையை விட ரூ.5 முதல் ரூ.10 கூடுதலாக விலை வைத்து மதுவிற்பனை செய்தது தெரியவந்தது.
இதில் 12 டாஸ்மாக் கடை பணியாளர்கள் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
எச்சரிக்கை
கூடுதல் விலை விற்பனை குறித்த ஆய்வு தொடர்ச்சியாக நடத்தப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.