தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது நடவடிக்கை: நீதிபதி அறிக்கையில் பரிந்துரை
“குருவிகளை சுடுவதுபோல சுட்டுக் கொன்றுள்ளனர்” தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது நடவடிக்கை நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் பரிந்துரை.
சென்னை,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவது போல சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்துள்ள விசாரணை அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச்சூடு சம்பவம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு போராட்டக்காரர்கள் போராடி வந்தனர். போராட்டக்களத்தின் 100-வது நாளான அதே ஆண்டு மே மாதம் 22-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.
அப்போது அங்கு ஏற்பட்ட கலவரத்தின்போது, போலீசார் துப்பாக்கி சூட்டில் இறங்கினர். இதில் போராட்டக்காரர்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியதோடு, இன்றளவும் அது ஆறாத வடுவாகவும் உள்ளது.
திடுக்கிடும் விஷயங்கள்
இதுகுறித்து விசாரணை நடத்தி அதை அறிக்கையாக தாக்கல் செய்ய ஒருநபர் விசாரணை ஆணையத்தை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு அமைத்தது.
அதன்படி, அவர் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணையை நடத்தினார். தொடர்ந்து அவர் விசாரணையை மேற்கொண்டு, கடந்த மே மாதம் 18-ந்தேதி, அது தொடர்பான அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்து இருந்தார்.
இந்தநிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்திருந்த அறிக்கையில் திடுக்கிடும் விஷயங்கள் பலவற்றை தெரிவித்து இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. அதன் விவரங்கள் வருமாறு:-
முன்னெச்சரிக்கை இன்றி...
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் ஒளிந்துக்கொண்டு துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றனர். தடியடி, கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் கையாளாமல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
* எந்தவிதமான ஆத்திரமூட்டும் சம்பவங்கள் இல்லாத போதிலும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கி குண்டு எங்கிருந்து வந்தது? என்று தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடியிருக்கின்றனர்.
குருவிகளை சுடுவது போல...
* வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்கவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறும் வாதத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை. கலைந்து ஓடிய போராட்டக்காரர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது.
* ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவதுபோல, போலீசார் சுட்டுக்கொன்று இருக்கின்றனர். அதிலும் தொலைவில் இருந்து குறி பார்த்து சுடக்கூடிய துப்பாக்கியை பயன்படுத்தி இருப்பது, உடற்கூராய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னந்தலையில் பாய்ந்த குண்டு
* துப்பாக்கி குண்டுகள் பின்னந்தலைவழியாக ஊடுருவி நெற்றி வழியாக வெளியே வந்ததன் மூலம் உயிர்தப்ப ஓடியவர்களை பின்னால் இருந்து சுட்டு இருப்பது அம்பலம் ஆகியிருக்கிறது. அந்தவகையில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 6 பேர் பின்னந்தலையில்தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
* இந்த கலவரத்தில் எந்த ஒரு போலீஸ்காரருக்கும் படுகாயம் ஏற்படவில்லை. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீசார் வரம்புகளை மீறி செயல்பட்டு இருக்கின்றனர்.
17 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
* 2018-ம் ஆண்டில் பணியாற்றிய தென்மண்டல ஐ.ஜி., நெல்லை சரக டி.ஐ.ஜி., தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, 3 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமை போலீஸ்காரர், 7 போலீஸ்காரர்கள் என மொத்தம் 17 பேர் மீது குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், சம்பவம் நடந்தபோது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலட்சியமாக இருந்துள்ளார். மேலும் எந்தவித யோசனையும் செய்யாமல் முடிவுகளை எடுத்து இருக்கிறார். அவர்மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.