அதிக ஆட்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை
அதிக ஆட்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆர்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது. இதில், ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து அதன் மீது திருப்தி இல்லாத 9 மனுக்கள் மற்றும் புதிதாக 33 மனுக்கள் என மொத்தம் 42 மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சம்மந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளிடம் உரிய ஆலோசனைகளை வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நடவடிக்கை
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் நேற்று முன்தினம் ஆம்பூரில் 10 குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆட்டோவில் அதிக அளவில் ஆட்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.