பொதுக்கழிப்பிடத்தை இடித்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
கவுன்சிலர்கள் கோரிக்கை
பொதுக்கழிப்பிடத்தை இடித்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
52 தீர்மானங்கள்
ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டு குறைகள், பிரச்சினை தொடர்பாக பேசினார்கள்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
நடராஜா தியேட்டர் பின்புற குடியிருப்பு பகுதியில் பொதுக்கழிப்பிடம் இருந்து வந்தது. கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்புதான் பல லட்சம் ரூபாய் செலவில் கழிப்பிடம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஓடைப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் பொக்லைன் எந்திரம் மூலமாக பொதுக்கழிப்பிடத்தை இடித்து அகற்றி விட்டார். இதுதொடர்பாக ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அங்கு புதிய பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தோடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புக்கான தண்ணீர் வசதி மாநகராட்சி நிதியில் இருந்து எவ்வாறு செய்ய முடியும்?
அடிப்படை வசதி
ஈரோடு எல்.வி.ஆர். காலனியில் குடிநீர், சாக்கடை, சாலை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல இடங்களில் பொதுகழிப்பிடம் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
மாநகராட்சி சிறுவர் பூங்காக்கள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக கருவில்பாறை வலசு பகுதியில் உள்ள பூங்காவை சீரமைத்து கொடுக்க வேண்டும். வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணி நடக்கிறது. அங்கு உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாநில, மத்திய அரசுகளின் நிதி பங்களிப்பு பெறப்பட்டு விட்டதா என்பதை விளக்க வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்களின் விவாதம் நடைபெற்றது.
பூங்கா சீரமைப்பு
அதற்கு பதில் அளித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறுகையில், "சித்தோடு பேரூராட்சியில் குடியிருப்புக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க அமைச்சர் மற்றும் உயர்அதிகாரிகள் கூறியதன்பேரில் தீர்மானம்கொண்டு வரப்பட்டு உள்ளது.
பூங்காக்களை சீரமைக்க தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளலாம். கருவில்பாறை வலசு குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.
மாநகராட்சி நகர்ப்புற சுகாதார அதிகாரி பிரகாஷ், "ஈரோடு நகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2016-ம் ஆண்டு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களாக மாற்றப்பட்டன. அங்கு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது வரை மாநகராட்சி நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் நிதியை வழங்குவதற்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் வரையில் பரிந்துரை அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும், 2022-ம் ஆண்டு வரைக்கான பரிந்துரையை தயார் செய்யும் பணியும் நடக்கிறது", என்றார்.