சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீது நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில், குடியாத்தம் கோட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கான குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, கணபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிலம்பரசன், சிவச்சந்திரன், தேவபிரகாஷ், பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு குடியாத்தம் துணை கோட்டத்தில் சாராயம், கஞ்சா, குட்கா, ஹான்ஸ் மற்றும் லாட்டரி ஆகியவற்றை முற்றிலும் ஒழிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் இந்த சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்து குறித்தும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடவடிக்கை
டி.ஜி.பி உத்தரவின் பேரிலும், வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்யபிரியா அறிவுறுத்தல் பேரிலும் வேலூர் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா, ்சாராயம் குட்கா, ஹான்ஸ், லாட்டரி, மணல் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு சமூக விரோத செயல்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா, சாராயம், லாட்டரி மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள், அதை வெளியூரிலிருந்து கடத்தி வருபவர்கள், அதனை பதுக்கி வைப்பவர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.