சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றால்டிரைவர்கள் மீது நடவடிக்கை
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், டிரைவரின் ஓட்டுனர் உரிமம் 6 மாதத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சரக்கு வாகனம் கவிழ்ந்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் பாதைக்காடு என்ற இடத்தில் கடந்த 3-ந் தேதி மாலை 6 மணிக்கு சீராப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 30 பேர் சரக்கு வாகனத்தில் கோவிலுக்கு சென்று, சாமியை வழிபட்டு பின்னர் வீடு திரும்பும்போது, வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
சீராப்பள்ளியை சேர்ந்த கலைவாணன் என்பவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை, அவரது தந்தை தர்மலிங்கம் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி உள்ளார். இந்த வாகனம் அனுமதி சீட்டில்லா சரக்கு வாகனம். இந்த வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்ல அனுமதியில்லை.
வாகனம் பறிமுதல்
இது தொடர்பாக, நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சரக்கு வாகனத்தை ஓட்டிய சென்ற டிரைவர் தர்மலிங்கத்தின் லைசென்ஸ், குறைந்தபட்சம் 3 மாதத்திற்கு தற்காலிக தடை செய்யப்படும். மேலும் ஆட்களை ஏற்றிச் சென்றதற்காகவும், காப்பீடு சான்று புதுப்பிக்காமல் இயக்கியதற்காகவும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.15 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால், வாகனம் பறிமுதல் செய்வதுடன், டிரைவரின் ஓட்டுனர் உரிமம் 3 முதல் 6 மாதம் வரை தற்காலிகமாக தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.