நீர்நிலைகளில் கழிவுநீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை
நீர்நிலைகளில் கழிவுநீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் விஜயராணி, இணை பதிவாளர் காந்திநாதன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிபாரதி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசினர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
பால் கொள்முதல் விலை
பெருமாள்:- பசும் பாலுக்கு ரூ.41, எருமை பாலுக்கு ரூ.52 என கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
ஆவின் பொதுமேலாளர்:- பால் கொள்முதல் விலை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு வாரத்தில் நல்ல செய்தி வரும்.
கலெக்டர்:- முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே பால் உற்பத்தியாளர்களுக்கு நல்லதே நடக்கும்.
ரெங்கமணி:- பிரதமரின் உதவித்தொகை திட்டத்தில் பல விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்:- சுமார் 12 ஆயிரம் விவசாயிகளின் ஆவணங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதில் தகுதியான விவசாயிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்.
கழிவுநீர் கலந்தால் நடவடிக்கை
ராமசாமி:- குடகனாறு தண்ணீர் பங்கீடு தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் குடகனாற்றில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் மாசடைகிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
கலெக்டர்:- நீர்நிலைகளில் கழிவுநீரை திறந்துவிட்ட 4 தொழிற்சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன. அதேபோல் குடகனாற்றில் கழிவுநீரை திறந்து விடும் தொழிற்சாலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரராஜ்:- பிரதான கால்வாயை தூர்வாராததால் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் பல குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. வேட்டுவன்குளம் பகுதியில் உள்ள கோவிலில் விவசாயிகள் மழை வேண்டி வழிபாடு செய்வது வழக்கம். தற்போது கோவிலுக்கு செல்ல பாதை இல்லாத நிலை உள்ளது.
கலெக்டர்:- காலம், காலமாக பயன்படுத்திய பாதையை யாரும் அடைக்க முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல்
பாத்திமா ராஜரத்தினம்:- தென்னை மரங்களில் வெள்ளை பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு குறைந்த விலையே கொடுக்கின்றனர். அதை மாற்றி உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமாள்:- தோட்டக்கலை பயிர்களுக்கான காப்பீடு திட்டத்தில் விடுபட்ட 5 வட்டாரங்களை சேர்க்க வேண்டும். கடைகளில் உரம் சரியாக கிடைப்பதில்லை. பதுக்கல் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதம் வரை இருந்தால் கொள்முதல் செய்ய வேண்டும்.
தோட்டக்கலை துணை இயக்குனர்:- விடுபட்ட பகுதிகளில் காப்பீட்டு திட்டத்தில் வாழையை சேர்க்க பரிந்துரை அனுப்பி இருக்கிறோம்.
இணை பதிவாளர்:- தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறாதவர்களும் உரம் வாங்கி கொள்ளலாம்.
இணை இயக்குனர்:- வேளாண் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு உரக்கடைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சிவசங்கரன்:- நத்தம் மலைப்பகுதிகளில் அருவிகள் நிறைய உள்ளன. அதை தடுத்து அணைகள் கட்ட வேண்டும். காட்டெருமைகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியில் தொட்டிகள் கட்ட வேண்டும். முறைகேடாக செயல்படும் கல்குவாரிகளை மூட வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.