ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிவகாசி,
ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சங்கீதா இன்பம் தலைமை தாங்கினார். துணை மேயர் விக்னேஷ்ப்ரியா காளிராஜன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களின் மீது கவுன்சிலர்கள் பேசியதாவது:-
பாக்கியலட்சுமி:- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதிகாரிகளின் கவனக்குறைவால் அந்த திட்டம் தற்போது ரத்து ஆகி உள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து எனது வார்டு பகுதியில் அங்கன்வாடி அமைக்க வேண்டும்.
ஞானசேகரன்: சிவகாசி பகுதியில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதை அகற்ற கடந்த கூட்டத்தில் வலியுறுத்தினேன். ஆனால் அதிகாரிகள் தயக்கம்காட்டி வருகிறார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உழவர்சந்தை
ராஜேஷ்: சிவகாசி உழவர்சந்தையை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். வார்டுகளில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்கிய மாநகராட்சி நிர்வாகத்துக்கு நன்றி.
தங்கபாண்டிசெல்வி: எனது வார்டில் கழிப்பிடத்தை பராமரிக்க நிதி ஒதுக்கியும் ஒப்பந்ததாரர் அந்த பணியை இன்னும் தொடங்க வில்லை.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.