மாணவர்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
18 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வந்தவாசி
18 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது பதிவேடுகள், குற்ற வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-
பெற்றோர் மீது நடவடிக்கை
18 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது. அவ்வாறு அவர்கள் ஓட்டினால், அவர்களது பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கிழக்கு மற்றும் தாலுகா போலீஸ் நிலையம், ஆரணி, போளூர், தானிப்பாடி ஆகிய 5 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வந்தவாசி நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.