பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை
பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் என அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஏமாற்றி பணத்தையும் பறித்து விடுவதாக புகார்கள் வரப்பெற்று உள்ளன.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்குப்பதிவும் செய்யப்படும். மேலும் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு உள்ளது தெரிய வருகிறது.
அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1077 என்ற எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.