வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை


வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், அளவுக்கு அதிகமாகவும் கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிககை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், அளவுக்கு அதிகமாகவும் கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிககை விடுத்துள்ளார்.

மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம்

குமரி மாவட்ட மாதாந்திர குற்ற தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தலைமை தாங்கினார்.

இதில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் மதியழகன், அரசு வக்கீல்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி உறைவிட மருத்துவ அதிகாரி ஜோசப் சென், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசும்போது கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

கோர்ட்டுகளில் விசாரணையில் இருக்கும் வழக்குகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் முனைப்பு காட்ட வேண்டும். போலீஸ் நிலையங்களில் ஏராளமான வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களை கோர்ட்டு மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கவும், பிடிவாரண்டு நிலுைவயில் உள்ள குற்றவாளிகளை விரைந்து பிடித்து, கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கனிம வளங்களை அனுமதியின்றியும், அளவுக்கு அதிகமாகவும் வாகனங்களில் எடுத்துச் செல்வதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய போலீசார் விழிப்பாக இருந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா தடுப்பு

கஞ்சா விற்பனையை நமது மாவட்டத்தில் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இனிமேல் தனிப்படை அமைத்து வெளிமாநிலங்கள் அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கோடைகாலம் என்பதால் விடுமுறையில் குமரி மாவட்ட மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு சுற்றுலா மற்றும் உறவினர்கள் ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களது வீடுகளில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்த காலங்களில் அதிகமான போலீசாரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரிக் க வேண் டும். வெளியூர் செல்பவர்கள் தங்கள் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் கொடுத்துவிட்டுச் செல்லவும் அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

பாராட்டுச்சான்று

கோர்ட்டு நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்டு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த போலீசார் உள்பட சிறந்த முறையில் பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை முகாம் மைதானத்தில் போலீசாரின் இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் போலீசாரின் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.


Next Story