தமிழக தொழிலாளர்களை புறக்கணிக்கும் தனியார் நூற்பாலைகள் மீது நடவடிக்கை; பா.ம.க. வலியுறுத்தல்


தமிழக தொழிலாளர்களை புறக்கணிக்கும் தனியார் நூற்பாலைகள் மீது நடவடிக்கை; பா.ம.க. வலியுறுத்தல்
x

தமிழக தொழிலாளர்களை புறக்கணிக்கும் தனியார் நூற்பாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.

திண்டுக்கல்

பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், வேடசந்தூரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வைரமுத்து, வடமதுரை ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கணேசன் வரவேற்றாார். மாநில பொருளாளர் திலகபாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில், வடமதுரை நகர செயலாளர் கருப்புசாமி, விவசாய அணி ஒன்றிய செயலாளர் இன்னாசி, விவசாய அணி தலைவர் பொன்னுச்சாமி, தொழிற்சங்க தலைவர் ஈஸ்வரன், மாணவரணி செயலாளர் சிவராஜா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு அலுவலக கோப்புகளில் ஆங்கில கலப்பை தடுக்க வேண்டும். வேடசந்தூர் பகுதியில் தமிழக தொழிலாளர்களை புறக்கணித்துவிட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தனியார் நூற்பாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நூற்பாலைகளில் உள்ள தங்கும் விடுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு குழுக்கள் அமைப்பதை சமூக நலத்துறை கண்காணித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வேடசந்தூர் நகர செயலாளர் முனியப்பன் நன்றி கூறினார்.


Next Story