மாணவர்களுக்கு தலைமுடி சீராக வெட்டாத சலூன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை; கலெக்டர் உத்தரவு


மாணவர்களுக்கு தலைமுடி சீராக வெட்டாத சலூன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை; கலெக்டர் உத்தரவு
x

பள்ளி மாணவர்களுக்கு சீராக தலைமுடி வெட்டாத சலூன் கடைக்காரர்கள் மீதும், ஆடைகளை கலாசாரத்துக்கு எதிராக தைக்கும் தையல்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளார்.

வேலூர்

அடுக்கம்பாறை, ஜூன்.21-பள்ளி மாணவர்களுக்கு சீராக தலைமுடி வெட்டாத சலூன் கடைக்காரர்கள் மீதும், ஆடைகளை கலாசாரத்துக்கு எதிராக தைக்கும் தையல்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளார்.

திடீர் ஆய்வு

வேலூரை அடுத்த கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளியில் நடந்த கடவுள் வாழ்த்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்தாய் வாழ்த்து மற்றும் தேசியகீதம் பாடுவதன் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர் பேசியதாவது:-

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது ஒழுக்கத்துடன் வர வேண்டும். தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசார முறையைப் பின்பற்ற வேண்டும். ஒருமை பண்பாட்டை கடைபிடிக்க அனைவரும் சீருடையில் பள்ளிக்கு வரவேண்டும்.

ஒழுக்கமான முறையில் பள்ளிக்கு வருவது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தலைமுடி வெட்டும்போது எந்தவித அலங்காரமும் செய்யாமல் ஒழுங்கான முறையில் முடிவெட்டி பள்ளிக்கு வரவேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வேலூர் மாவட்டம் தேர்ச்சியில் கடைசி இடத்தில் உள்ளது. ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி தேர்ச்சியை உயர்த்த முழு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்புறப்படுத்த உத்தரவு

அதனை தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பள்ளி எதிரே உள்ள மளிகை கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் சோதனை செய்தார். அப்போது அந்த கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. உடனே அவற்றை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த ஆசிரியர்களுடன் இணைந்து, பெற்றோர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகளின் அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அணியும் சீருடை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவைகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். சலூன்கடைக்காரர்கள் மாணவர்களுக்கு சீரான முறையில் முடிவெட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதை மீறி டிசைன் டிசைனாக முடிவெட்டும் சலூன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தையல்காரர்கள் துணிகளை கலாசாரத்துக்கு எதிராக தைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி

22-ந் தேதி முதல் (நாளை) பெற்றோர்களின் ஒப்புதலோடு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது வேலூர் தாசில்தார் செந்தில், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், பானுமதி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story