பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை
அரக்கோணம் பகுதிகளில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல்செய்யும் கல்லூரி மாணவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
அரக்கோணம் பகுதிகளில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல்செய்யும் கல்லூரி மாணவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், குழந்தை திருமணம் நடப்பது குறித்து தகவல் தெரிய வரும் நிலையில் அதை தடுத்து, குழந்தைகள் திருமணம் மேற்கொள்ளும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் குழந்தை திருமணம் செய்தால் தண்டனைகள் அதிகம் என்பதை பொதுமக்கள் உணர்வார்கள்.
மேலும் 18 வயதிற்கு முன்னதாக கர்ப்பமடையும் பெண் பிள்ளைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் பட்சத்தில் அவர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். பல்வேறு தருணங்களில் பெண் பிள்ளைகள், ஆண்களிடம் ஏமாந்து விடுதல் மற்றும் குழந்தை திருமணங்கள் இவைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பிரசவத்திற்கு செல்லும் போது, பிரசவம் செய்வதில் சட்ட சிக்கல்களால் தாமதம் ஏற்படுகிறது.
பிச்சை எடுக்கிறார்கள்
எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் 18 வயதிற்கு கீழே உள்ள பெண்கள் கர்ப்பம் அடைந்து சிகிச்சைக்காக வரும் போது முதலில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்திட வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க உதவியாக இருக்கும்.
பனப்பாக்கம் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள், பிள்ளைகளுடன் பஸ் நிலையங்களில் பிச்சை எடுப்பதை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அவ்வப்போது கண்டறிந்து அவர்களை மீட்டு பள்ளிகளுக்கு அனுப்பிட நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் பிச்சை எடுக்கும் தொழிலை செய்து வருகின்றனர். குழந்தைகள் இருக்கும் இருப்பிடத்திற்கு நேரடியாக நானே (கலெக்டர்) சென்று, பெற்றோர்களிடம் அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன என்பதை நேரடியாக கேட்டு அதற்கான தீர்வை மேற்கொள்கிறேன்.
மாணவர்கள் மீது நடவடிக்கை
மேலும் அரக்கோணம் பகுதிகளில் பள்ளி மாணவிகளை, அவர்கள் பள்ளிக்கு சென்று வரும்போது, கல்லூரி மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதாக புகார்கள் வருகின்றது. இதன் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, குழந்தைகள் நல குழுமத் தலைவர் வேதநாயகம், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, துணை இயக்குனர் (சுகாதாரம்) மணிமாறன், துணை கண்காணிப்பாளர் ராஜுசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.