அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாக பாடம் நடத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை;போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் மனு


அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாக பாடம் நடத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை;போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் மனு
x

மாணவிகள் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாக பாடம் நடத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

மாணவிகள் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாக பாடம் நடத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.

பெற்றோர் மனு

இரணியலில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவிகளின் பெற்றோர் சிலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

இரணியல், வில்லுக்குறி உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவ, மாணவிகளுக்கு சம்பந்தமில்லாத வகையில் ஆபாசமாக பேசி முகம் சுளிக்கும் வகையில் செக்ஸ் பாடம் நடத்தி வருகிறார். வகுப்பறையில் அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவ, மாணவிகளிடம் தலைமை ஆசிரியரிடம் கூறி மாற்று சான்றிதழ் தர வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

நடவடிக்கை

ஆசிரியரின் மோசமான செய்கைகளால் தற்போது மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கே அச்சப்படும் நிலை உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே போலீஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, 'இரணியலில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகள் பலரும் இந்த ஆசிரியரால் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்பு வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் இது பற்றி வெளியே பேசாமல் இருக்கிறார்கள். தற்போது சில மாணவிகள் தைரியமாக புகார் அளித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற ஆசிரியர்களால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள்' என கூறினர்.


Next Story