மகனை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை
காதல் திருமணம் செய்ததால் மகனை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என போலீஸ் சூப்பிரண்டிடம், மீனவர் தனது குடும்பத்துடன் மனு அளித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை பனங்காட்டுத்தெருவை சேர்ந்த மீனவரான குமார்(வயது 61) நேற்று தனது குடும்பத்தினருடன் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது மூத்த மகன் சபீந்திரன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியே சென்று விட்டார். எனது மகன் காதல் திருமணம் செய்ததால் மீனவ கிராம பஞ்சாயத்தார், எனக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் எனது மகன் சபீந்திரனை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். சபீந்திரனுடன் எனது 2-வது மகன் சபரிநாதன் பேசியதால் அவருக்கும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். அதை கட்ட மறுத்த சபரிநாதன் மீது ஊர் கட்டுப்பாடு விதித்து அவரிடம் யாரும் பேசக்கூடாது. அவரது படகில் யாரும் வேலைக்கு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். இதனால் எனது 2 மகன்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனது 2 மகன்களும் வறுமையின் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு என்னிடம் பணம் கேட்டனர். அதை பார்த்த கிராம பஞ்சாயத்தார், கட்டுப்பாட்டை மதிக்க மாட்டீர்களா? என்று கேட்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.