ஊட்டியில் பதிவு செய்யாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை-நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
ஊட்டி நகராட்சியில் பதிவு செய்யாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டி
ஊட்டி நகராட்சியில் பதிவு செய்யாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக நகர்புறங்களில் திறந்த வெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடுகள், கழிவுநீர் மற்றும் இதர கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற வகையில் வெளியேற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் நகராட்சிகளில் திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிறக்கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊட்டி நகராட்சி ஆணையளர் காந்திராஜன் கூறியதாவது:-
நடவடிக்கை
மலக்கசடு மற்றும் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2000 ஆகும். உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மலக்கசடு மற்றும் கழிவுகளை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது இந்த சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாகும்.
இதேபோல் ஊட்டி நகராட்சியில் பதிவு செய்யாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பயன்படுத்தி, பொதுமக்கள் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கழிவுநீரை அகற்றக்கூடாது. அவ்வாறு பதிவு செய்யாத வாகனங்களை கொண்டு கழிவுநீர் அகற்றும்போது விபத்து ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரே முழு பொறுப்பாகும். மேலும் அந்த நிறுவனம் மற்றும் வீட்டு உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.