அதிரடி சாராய வேட்டை; இதுவரை 535 பேர் கைது


அதிரடி சாராய வேட்டை; இதுவரை 535 பேர் கைது
x

டெல்டா மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சாராய வேட்டையில் இதுவரை 535 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சாராய வேட்டையில் இதுவரை 535 பேர் கைது செய்யப்பட்டனர்.

விஷ சாராயம் குடித்து 22 பேர் பலி

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்துக்கு 22 பேர் வரை பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் போலீசார் முடுக்கி விடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அந்தந்த மாவட்டங்களில் இது தொடர்பாக வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி தஞ்சை சரகத்துக்குட்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் தீவிர சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

போலீசார் தீவிர சோதனை

அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 152 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் 143 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 145 பேரும், நாகை மாவட்டத்தில் 94 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 94 பேரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 77 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 77 பேரும் கைது செய்யப்பட்டனர்.

535 பேர் கைது

4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் வரை 463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 468 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 24 வழக்குகளில் 24 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 33 வழக்குகளில் 33 பேரும், நாகை மாவட்டத்தில் 8 வழக்குகளில் 4 பேரும் (4 பேர் தப்பி ஓட்டம்), மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 வழக்குகளில் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று வரை டெல்டா மாவட்டங்களில் மட்டும் 536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 535 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story