பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை-கலெக்டர் அறிவுறுத்தல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வேண்டுகோள் விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
அனைத்து ஊராட்சிகளிலும் வாழுகின்ற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் சரியாக பணிகளை மேற்கொள்வதுடன், அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு மக்களின் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும்.
பிளாஸ்டிக் பொருள் தவிர்ப்பு
ஊராட்சிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் திடக்கழிவு, தூய்மை பணிகளை சரியாக மேற்கொள்வதுடன், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதுபோல ஒருமுறை பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழிப்பைகளை பயன்படுத்துவதையும் முழுமையாக தவிர்ப்பதுடன் அதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
அனைத்து ஊராட்சிகளிலும் குறைந்தப்பட்சமாக ஏழு பண்ணை குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் விவசாயிகள், விருப்பமுள்ளவர்கள் பண்ணை குட்டையை அமைத்து, அதில் மீன் வளர்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம். அனைத்து ஊராட்சியிலும் மழைநீர் சேகரிக்கப்பட வேண்டும். மரங்களை அதிகளவில் நடவுசெய்து இயற்கையை பாதுகாத்திட வேண்டும். நமது மாவட்டத்தில் பனை விதைகளை அதிகபடியாக நடவு செய்ய வேண்டும்.
தடுப்பணைகள்
ஊராட்சிகளில் தடுப்பணைகள் தேவைப்படும் இடங்களில் தடுப்பணை அமைக்கப்பட வேண்டும். அனைவரும் சிறப்பாக பணியாற்றி, தங்களின் ஊராட்சிகளை வளர்ச்சியடைந்த ஊராட்சியாக மாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, உதவி திட்ட அலுவலர் செல்வன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.