திட்டங்குளத்தில் தற்காலிக சந்தைக்கு அனுமதி வழங்க நடவடிக்கை: உதவி கலெக்டர்
வியாபாரிகள் முறையாக விண்ணப்பித்தால் திட்டங்குளத்தில் தற்காலிக சந்தை அமைக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி:
வியாபாரிகள் முறையாக விண்ணப்பித்தால் திட்டங்குளத்தில் தற்காலிக சந்தை அமைக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
சந்தையில் புதிய கட்டுமானம்
கோவில்பட்டியில் நகரசபை பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை இயங்கி வந்தது. இங்குள்ள 398 கடைகளை இடித்துவிட்டு, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.87 கோடி மதிப்பில் புதியதாக 251 கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
தினசரி சந்தையில் புதிய கடைகள் கட்டி முடிக்கும் வரை நகரசபை சார்பில் தற்காலிக சந்தை கூடுதல் பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டது. அங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி, தினசரி வியாபாரிகள் சங்கத்தினர், தங்கள் சங்கம் சார்பில் வாங்கப்பட்ட திட்டங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஏப்.17-ந் தேதி தற்காலிக சந்தையை தொடங்கினர். பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் அனுமதியின்றி தற்காலிக சந்தையை தனியார் இடத்தில் நடத்த தடை விதித்தார்.
பேச்சுவார்த்தை
இதனால், கடந்த 24-ந்தேதி முதல் தற்காலிக சந்தை மூடப்பட்டது. அங்கிருந்து வியாபாரிகள் சங்கத்தினர், எங்களுக்கு தற்காலிக சந்தை அமைக்க அனுமதி தரும்வரை காலவரையற்ற விடுமுறை அறிவித்தனர்.
இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினருடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், நகரசபை ஆணையாளர் கமலா, பொறியாளர் ரமேஷ், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் ராஜேஷ்குமார், கருப்பசாமி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனராஜன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஹரி கண்ணன், சிலுவை அந்தோணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முறையாக விண்ணப்பித்தால்...
கூட்டத்தில் வியாபாரிகள் பேசுகையில், நகரசபை சார்பில் கூடுதல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தினசரி சந்தையில் வாகனங்கள் வந்து செல்வதற்கும், கடைகளில் வைக்கப்படும் காய்கறி உள்ளிட்ட பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அங்கு காய்கறி மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளும் இல்லை. இதை கருத்தில் கொண்டு தான் நாங்கள் திட்டங்குளம் பகுதியில் இடம் வாங்கி தற்காலிக சந்தை அமைத்தோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும்' என்றனர்.
இதற்கு பதிலளித்து உதவி கலெக்டர் பேசுகையில், ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி அனுமதியின்றி தற்காலிக சந்தை அமைக்க முடியாது.
அதேசமயம் வியாபாரிகள் தற்காலிக சந்தை அமைக்க உரிய முறையில் விண்ணப்பித்தால் விரைந்து அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.