அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் வைத்தால் நடவடிக்கை
மயிலாடுதுறை நகரில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்கள், தனியார் திருமண மண்டப உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி பேசுகையில், மயிலாடுதுறை நகரில் நகராட்சி அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் அதிக அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுகிறது. டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி நகராட்சியில் எவ்வித அனுமதியுமின்றி நகரில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. திருமண மண்டபத்திற்கு வெளிபகுதியில் பேனர்கள் வைக்கக்கூடாது. வணிக நிறுவனங்கள் பொது இடங்களில் நகராட்சி அனுமதி பெற்றுதான் பேனர்கள் வைக்க வேண்டும். அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதில் நகரஅமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், அலுவலர்கள் நேதாஜி, மோகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.