குறவர் பெயரை பயன்படுத்தி வீடியோ பதிவிட்டால் நடவடிக்கை: குறவன்-குறத்தி பெயரில் நடன நிகழ்ச்சிக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


குறவர் பெயரை பயன்படுத்தி வீடியோ பதிவிட்டால் நடவடிக்கை: குறவன்-குறத்தி பெயரில் நடன நிகழ்ச்சிக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சமூக வலைதளங்களில் குறவன்-குறத்தி பெயரில் வீடியோவை பதிவிடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், குறவன்-குறத்தி பெயரில் நடன நிகழ்ச்சி நடத்த தடை விதித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


சமூக வலைதளங்களில் குறவன்-குறத்தி பெயரில் வீடியோவை பதிவிடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், குறவன்-குறத்தி பெயரில் நடன நிகழ்ச்சி நடத்த தடை விதித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குறவர் சமூகம் பாதிப்பு

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த இரணியன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான 'குறவர்' பழங்குடி சமூக மக்கள் வாழ்ந்து வருகிறோம். திருவிழா காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் எங்கள் சமூக பெயரான குறவன்-குறத்தி என பெயரிட்டு ஆபாச நடனம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்து, எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தி வருகின்றனர். இணையதளத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடன வீடியோக்களை நீக்கவும், குறவன்-குறத்தி என்ற தலைப்பில் ஆபாச நடனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசு வக்கீல் ஆஜராகி, திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது ஆபாச நடனங்கள் கூடாது, பொது பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் நிகழ்ச்சியை பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு ஐகோர்ட்டு அறிவுரையின்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, என்றார்.

இழிவுபடுத்துகின்றனர்

விசாரணை முடிவில் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த நிலம் பழமையான மொழி, கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் தாயகம் ஆகும். பழங்காலத்தில் இருந்தே, ஒரு நபரின் தொழில், வசிப்பிடத்தை வைத்து அந்த நபரை விவரிக்கும் கலாசாரம் உள்ளது. இதன்படி, ஒரு சமூகம் உருவாகி, அது மெதுவாக சாதியாக உருவானது.

சாதிகள், துணை சாதிகள் பெருமளவில் அதிகரித்துவிட்டதால் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, தற்போது, சில சமூகங்கள், பெயர்கள் மற்றும் சாதி அடையாளத்தை அனுமதியின்றி வெறுமனே பயன்படுத்துகிறார்கள். அதன்மூலம் அவர்களின் பூர்வீக நடனம், கலை வடிவங்கள், கலாசாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு அவற்றை தவறாக சித்தரிப்பதன் மூலம் இழிவுபடுத்தவும் செய்கின்றனர்.

இத்தகைய நடைமுறைகளை அனுமதிக்க முடியாது. அந்த வகையில் ஆரம்ப காலத்தில் குறவன்-குறத்தி நிகழ்ச்சியில் ஒழுக்கத்தை போதிக்கும் வகையில் கதைகள் இருந்துள்ளன. காலப்போக்கில் ஆபாசமாக மாறியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த நடனத்தில் ஈடுபடுபவர்கள் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. ஆனாலும் அந்த பெயரில் நடனம் ஆடுகின்றனர். இதனால் குறவர் சமூகத்தினர் கலாசாரமற்றவர்கள் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது என்பதும் அவரது குற்றச்சாட்டு.

கிரிமினல் நடவடிக்கை

ஆபாச நடனத்திற்கு தடை விதித்து ஏற்கனவே இதே கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டத்தின்படி மதம், இனம் போன்ற வேறுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். தற்போது குறவர் சமூகம் ஓரங்கட்டப்பட்டு உள்ளது. இவர்களுக்கு அடிப்படை கல்வி, வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. மற்றவர்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும், சலுகைகளும் குறவர் சமூகத்தினருக்கும் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என இந்த கோர்ட்டு கருதுகிறது.

எனவே சமூக வலைதளங்களில் குறவர் பெயரை பயன்படுத்தி வீடியோக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இணையதளத்தில் உரிய வசதியை சைபர் கிரைம் போலீசார் ஏற்படுத்த வேண்டும்.

குறவன்-குறத்தி பெயரில் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது. மீறுபவர்கள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story