டாக்டர்கள் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கினால் நடவடிக்கை
டாக்டர்கள் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் சார்பில் மருந்து விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் திருப்பத்தூர் வர்த்தக சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் அம்மு குட்டி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது போதை ஏற்படுத்தக்கூடிய தூக்க மாத்திரைகள், வலி மாத்திரைகள் உள்ளிட்ட மாத்திரைகளை டாக்டர்கள் சீட்டு இன்றி யாருக்கும் வழங்கக் கூடாது. யாராவது வழங்கினால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று மொத்த மருந்து வியாபாரிகள் லைசன்ஸ் உள்ள கடைகளுக்கு மட்டுமே மருந்துகள் வழங்க வேண்டும். தொடர்ச்சியாக போதை தரகூடிய மருந்துகள் வாங்கும் மருந்து கடைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருந்துகள் ஜமுனாமரத்தூர் பகுதிக்கு, திருப்பத்தூரில் இருந்து அளிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யும் கடைகளை மருத்துவ ஆய்வாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மருந்து ஆய்வாளர்கள் சரண்யா, மணிமேகலை, கோகிலா, தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் லோகேசன், பொருளாளர் சுகுமாரன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் டி.எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாடகங்கள் நடைபெற்றது. முடிவில் மருந்து ஆய்வாளர் சபரிநாதன் நன்றி கூறினார்.