பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் ஆவணம் எழுதுபவர்கள் நுழைந்தால் நடவடிக்கை
பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நடந்த பதிவுத்துறை சீராய்வு கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீராய்வு கூட்டம்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை மண்டல அளவிலான சீராய்வு கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட கலெக்டர் கார்மேகம், பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சேலம் மண்டல துணை பதிவுத்துறை தலைவர் பிரபாகர், மாவட்ட பதிவாளர்கள் மணிவண்ணன், சந்தானம், கவிதா, வளர்மதி, கனகராஜ், சிவலிங்கம், சத்தியமூர்த்தி மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி சார் பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு பின் அமைச்சர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அனுமதிக்கக்கூடாது.
பத்திர பதிவுத்துறை அலுவலங்களில் நடைபெறும் பதிவு பணிகளில் வெளிப்படை தன்மையை உறுதிசெய்திடும் வகையிலும், ஊழலை தடுத்திடும் வகையிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவு அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது. மேலும் ஆவணம் எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பதிவுத்துறை தலைவர் மூலம் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் திடீர் ஆய்வுகளின் போது ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணித்து வருகின்றனர். அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைத்தால் தவிர அலுவலகத்திற்குள் ஆவணம் எழுதுவோர் நுழையக்கூடாது. மேலு அவர்கள் சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமரும் இடத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதனையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உரிமம் ரத்து
இந்த விதிகளை மீறி சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுவோர் மற்றும் இடைத்தரகர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது ஆவண எழுத்தர்கள் உரிம விதிகள் 1982-ன் விதி 16 மற்றும் சுற்றறிக்கைகளின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளை மீறுபவர்களது உரிமம் ரத்து செய்வதோடு, அதனை கண்காணிக்க தவறும் சார் பதிவாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சொத்து வாங்குபவர்களோ, விற்பவர்களோ பதிவு செய்ய வரும் போது பணம் கொண்டுவர கூடாது என்று ஏற்கனவே கூறி உள்ளோம். அதன் அடிப்படையிலேயே ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஸ்டார் 3.0 விரைவில் அறிமுகம்
பொதுமக்களின் நலன் கருதி பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார் 3.0 விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது எதிர்கொள்ளப்படும் சில கால தாமதங்கள் கூட எதிர்வரும் நாட்களில் ஏற்படாத வகையில் பதிவு வேலைகள் வேகமாக நடைபெற ஏதுவாக இந்த மென்பொருள் அமையும். கடந்த காலங்களில் போலி பத்திரம் இருப்பது ஆய்வு செய்து சுமார் 2 ஆயிரம் பேருக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளில் பதிவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடந்த 2021-ம் ஆண்டில் பத்திரப்பதிவின் வருவாய் ரூ.10 ஆயிரம் கோடியாக இருந்தது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த ஆண்டு ரூ.17 ஆயிரத்து 354 கோடியாக வருவாய் ஈட்டி உள்ளது. பதிவுத்துறையில் தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.