விவசாயிகளிடம் பணியாளர்கள் பணம் வாங்கினால் நடவடிக்கை


விவசாயிகளிடம் பணியாளர்கள் பணம் வாங்கினால் நடவடிக்கை
x

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணியாளர்கள் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணியாளர்கள் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டம்

விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நேற்று உணவுகடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் கொள்முதல் பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாகை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்படி குறுவை சாகுபடிக்காக 95 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கொள்முதல் பணியாளர்கள் பிரச்சினைக்கு இடம் அளிக்காத வகையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

பணம் வாங்க கூடாது

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை வாங்குவதற்கு எந்த காரணம் கொண்டும் பணம் வாங்க கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் பணம் வாங்குவதாக புகார்கள் எழுந்தால் அந்த கொள்முதல் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழு கலெக்டர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டு கொள்முதல் பணி கண்காணிக்கப்படுகிறது.

சட்டப்படி நடவடிக்கை

இதை தவிர உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினரின். சோதனையின் போது தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே முறைகேடுகளுக்கு இடம் அளிக்காத வகையில் கொள்முதல் செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன், மேலாளர் (தரக்கட்டுப்பாடு) தியாகராஜன், துணைமேலாளர்கள் அற்புதராஜ், அருளரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story