கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி கொடி கம்பங்கள் நட்டால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  அனுமதியின்றி கொடி கம்பங்கள் நட்டால் நடவடிக்கை  கலெக்டர் எச்சரிக்கை
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி கொடி கம்பங்கள் நட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதா் எச்சரித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு, சாலை பாதுகாப்பு குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, நடப்பு மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும், சாலை விபத்துகள் குறித்தும், விபத்துகளை தவிர்ப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்றச் செயல்களை குறைத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். சாலை ஓரங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அனுமதியின்றி கொடிக் கம்பங்களை நடுவதை அனுமதிக்கக்கூடாது. மீறுவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 38 இடங்கள் தொடர் விபத்துகள் ஏற்படும் இடங்களாக ஹாட்ஸ்பாட் கண்டறியப்பட்டு, அங்கு விபத்துகளை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சுரேஷ், (நிலம்) ஹஜிதாபேகம், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, கள்ளக்குறிச்சி மண்டல போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், உளுந்தூர்பேட்டை மண்டல போக்குவரத்து அலுவலர் செந்தூர்வேல், அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசங்கரன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.


Next Story