நெல் கொள்முதலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை


நெல் கொள்முதலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து சரியான அளவில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா?, அதற்கான பணம் உடனுக்குடன் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

அப்போது நெமிலி வட்டம் பனப்பாக்கத்தை அடுத்த குச்சிதோப்பு பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நெல் மூட்டைகள் குறித்து கேட்டறிந்தார். மையத்தில் 156 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர். இதுவரையில் 103 விவசாயிகள் 40 கிலோ மூட்டைகள் வீதம் 6,051 நெல் மூட்டைகள் இதுவரையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்து நெல் மூட்டைகள் வழங்கிய பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் அதிக நெல் மூட்டைகள் போட்ட மேலப்புலம் புதூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் விவரங்களை கேட்ட கலெக்டர் வளர்மதி மேலப்புலம் மோட்டூர் ஊராட்சிக்கு நேரடியாக சென்று வெங்கடேசன் விவசாய நிலத்தை பார்வையிட்டார்.

14,000 மூட்டைகள்

இதனைத் தொடர்ந்து நெமிலி வட்டம் நெல்வாய் ஊராட்சி எஸ்.கொளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அங்கு 174 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர். அவர்களில் 140 விவசாயிகளிடமிருந்து சுமார் 14,000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17-ந் தேதி வரையில் நெல்கொள்முதல் பெறப்பட்டவர்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்வாய் ஊராட்சியைச் சார்ந்த விவசாயி நந்தகோபால் 200 மூட்டை முதல் முறையாகவும், 300 முட்டை இரண்டாம் முறையாகவும் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளதை அறிந்த கலெக்டர், விவசாயியை அழைத்து சென்று அவருடைய 30 ஏக்கர் நிலம் உள்ள இடத்தினை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடந்து கலெக்டர் வளர்மதி நிருபர்களிடம் கூறியதாவது:-

21 கொள்முதல் நிலையங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக 29.3.2023 வரையில் 9,070 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தவிர 1,100 மெட்ரிக் டன் நெல் வரவுள்ளது. பொதுவாக ஒரு விவசாயிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 55 முதல் 60 மூட்டை வரையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

இது போன்ற திடீர் ஆய்வுகளின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்களில் சரியான முறையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்கின்றார்களா என அறிந்து கொள்ள முடியும். இதனால் அனைத்து விவசாயிகளும் பயனடைவார்கள். அதேபோன்று கடந்த 17-ந் தேதி வரையில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு நெல்லுக்கான உரிய விலை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர ஆற்காடு கலவை வட்டத்தில் 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியான நடவடிக்கை

அங்கு நாளை (சனிக்கிழமை) முதல் கொள்முதல் பணி தொடங்கும். கொள்முதல் பணியில் ஏதேனும் முறைகேடுகள், குளறுபடிகள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர்தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேவிபிரியா, திட்ட இயக்குனர் லோகநாயகி, வேளாண்மை துணை இயக்குனர் விஸ்வநாதன், தாசில்தார் சுமதி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story