ரூ.21 கோடி கடன் தொடர்பான வழக்கில் அதிரடி: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ரூ.21 கோடி கடன் தொடர்பான வழக்கில் அதிரடி: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

ரூ.21 கோடி கடன் தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சொத்து விவரங்களை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பிரபல நடிகர் விஷால் 'விஷால் பிலிம் பேக்டரி' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நடிகர் விஷால் கடன்

நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை அவருக்காக லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.

இதையொட்டி நடிகர் விஷாலும், லைக்கா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும்வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமை களும் லைக்கா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவனம் வழக்கு

இந்த நிலையில் விஷால் தங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.21.29 கோடியை வழங்காமல் 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிட உள்ளதாகவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்க உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, ரூ.15 கோடியை ஐகோர்ட்டு தலைமைப்பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி யில் 3 வாரங்களில் நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என்று நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அவர் பணத்தை செலுத்தாததால், அவரை நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

விஷால் நேரில் ஆஜர்

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் ஆஜரானார். விஷால் தரப்பில், லைக்கா நிறுவனம் மேல்முறையீடு செய்ததால்தான் பணத்தைச் செலுத்தவில்லை; தனக்கு ஒரே நாளில் ரூ.18 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கும் வட்டி செலுத்திவருவதாகவும், ஒரு படத்தை எடுக்க திரைப்படத்துறையினர் படாதபாடுபடும் நிலையில் கடைசி நேரத்தில் படத்துக்கு தடை கோரி வழக்குகள் தொடரப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் லைக்கா தரப்பில், விஷால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில், தவறான தகவல்களை ஐகோர்ட்டுக்கு தெரிவிப்பதாகவும், வேண்டுமென்றால் அவரது சொத்து விவரங்களையும், கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்யட்டும் என்றும் வாதிடப்பட்டது.

நீதிபதி உத்தரவு

அப்போது நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, "நடிகர் விஷால் தொடர்ந்து படங்களில் நடித்துவரும்போது, வாங்கிய கடனை திருப்பிச்செலுத்தலாமே" என்று கருத்து தெரிவித்தார். அதற்கு விஷால், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்யவே தொடர்ந்து படங்களில் நடித்துவருவதாக கூறினார்.

அதையடுத்து நீதிபதி, "இந்த விளக்கத்தையும், சொத்து விவரங்களையும் கொண்ட பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்" என்று விஷாலுக்கு உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story