அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்றால் நடவடிக்கை
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்றதாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை இயக்குனர் மாரி முத்து தெரிவித்தார்.
இணை இயக்குனர் ஆய்வு
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடுத்திட்டம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வருகைப்பதிவு, சுகாதாரம், மருந்துகள், நிதிநிலை பயன்பாடு, கணக்குத் தணிக்கை, புற நோயாளிகள், உள் நோயாளிகள் வருகை, மகப்பேறு உள்ளிட்ட அனைத்துப்பிரிவுகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து மருத்துவமனையில் ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் இணை இயக்குனர் மாரிமுத்து பேசியதாவது:-
நடவடிக்கை
ஓர் சிறந்த சமுதாயம் மிக ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகளில், மகப்பேறு மரணம் தடுத்தல், இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் தடுத்தல், சரி விகித பாலினம் உண்டாக்குதல், கர்ப்பிணி தாய்மார்கள் 6-ம் மாதம், 8-வது மாதம் வரையிலான கரு கலைப்பு தடுத்தல், இரு குழந்தைகளுக்கு பிறகு நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தல் என ஓர் சிறந்த சமுதாயம் மிக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றார். சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் அன்போடும், கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மருத்துவமனைக்கு வரும் பொது மக்களிடமும், நோயாளிகளிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறக் கூடாது. லஞ்சம் குறித்து புகார்கள் ஏதேனும் வரப்பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.