அதிக கட்டணம் வசூலிக்கும் அவசர ஊர்தி மீது நடவடிக்கை


அதிக கட்டணம் வசூலிக்கும் அவசர ஊர்தி மீது நடவடிக்கை
x

அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் அவசர ஊர்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.

திருப்பத்தூர்

அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் அவசர ஊர்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பாக முறையான அறிவிப்பு வழங்கி, ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய நகராட்சிகளின் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் ஊரகம் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வெளியே சாலையில் வாகனம் நிறுத்தாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும்.

அவசர ஊர்தி மீது நடவடிக்கை

அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் அவசர ஊர்தி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளுக்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள கடைகள் மற்றும் மருந்தகங்களை போதை பொருட்கள் விற்பனை தடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சாலை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

பின்னர் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரால் வெளியிடப்பட்ட சாலை பாதுகாப்பு புத்தகங்களை வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாரிமுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் செந்தில், உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார், தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story