லாரி மெக்கானிக்கை கொன்று தூக்கில் தொங்க விட்டவர்கள் மீது நடவடிக்கை


லாரி மெக்கானிக்கை கொன்று தூக்கில் தொங்க விட்டவர்கள் மீது நடவடிக்கை
x

லாரி மெக்கானிக்கை கொன்று தூக்கில் தொங்க விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் பெற்றோர் புகார் அளித்தனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் அஜித்குமார் (வயது 22). லாரி மெக்கானிக்கான இவர் நேற்று அதே கிராமத்தில் ஒரு நிலத்தில் உள்ள மாமரத்தில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இவரின் சாவு குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அய்யப்பன், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது இளைய மகன் அஜித்குமார், விழுப்புரத்தில் உள்ள லாரி ஒர்க்‌ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு அவரது நண்பர் ஒருவருடன் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்த சூழலில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார், அவரது நண்பரை பிளேடால் அறுத்து விட்டார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனிடையே எனது மகன் அஜித்குமார், மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார். எனது மகனை அவரது நண்பர் அடியாட்கள் சிலருடன் சேர்த்து அடித்து சித்ரவதை செய்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.


Next Story