மோசடி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-போலீசில் முகவர்கள் புகார்


மோசடி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-போலீசில் முகவர்கள் புகார்
x

பண மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனுக்கள் அளித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

பண மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனுக்கள் அளித்தனர்.

புகார் மனு

செய்யாறு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி சேமிப்பு திட்டம், பொங்கல் சேமிப்பு திட்டம், தங்கம் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்தனர்.

அந்த நிறுவனம் பொது மக்களிடம் பணத்தை பெற்றது. திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டது.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனுக்கள் அளித்தனர்.

பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

செய்யாறு பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்தோம். அப்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எங்களை தொடர்பு கொண்டு, பிறரையும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்குமாறு தெரிவித்தனர். மேலும் நீங்கள் இந்த நிறுவனத்தில் 15 பேரை முதலீடு செய்ய வைத்தால் நீங்கள் ஒரு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றனர்.

அதை நம்பி நாங்களும் முகவர்களாக செயல்பட்டு ஏராளமான பொது மக்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தோம். திடீரென நிதி நிறுவனத்தை மூடிவிட்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர். தற்போது நாங்களும் எங்கள் மூலம் பணம் செலுத்திய பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தகராறு செய்கின்றனர். நாங்கள் செய்வதறியாது தவித்து வருகிறோம்.

செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

எனவே மக்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story