தடையை மீறும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும்


தடையை மீறும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும்
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயகுளத்தின் வடக்கு கரையின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து தடுப்புகள் அமைத்தாலும் தடைகளை மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலயகுளத்தின் வடக்கு கரையின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து தடுப்புகள் அமைத்தாலும் தடைகளை மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கமலாலய குளம்

திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு மேற்கு பக்கம் கமலாலய குளம் உள்ளது.. காசியில் 63 தீர்த்தகட்டங்கள் இருப்பதாகவும், கமலாலய குளத்தில் 64 தீர்த்தகட்டங்கள் இருப்பதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

காசியின் கங்கையை விட மேலான புண்ணியம் கொடுக்கக்கூடிய தீர்த்தகுளமாக இந்த குளம் விளங்குகிறது. குளத்தில் நீராடினால் தேவ தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கனரக வாகனங்கள் செல்ல தடை

இந்த குளத்திற்கு வற்றாத குளம் என்றும் பெயர் உண்டு. ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு இந்த குளத்தில் தர்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த குளத்தின் பாதுகாப்பு என்பது கேள்விகுறியாக உள்ளது. காரணம் குளத்தின் கரைகள் வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவது தான்.

இந்த பெருமைமிக்க குளத்தின் வடகரை பகுதி கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையில் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து மேல்கரை பகுதியும் இடிந்தது. இதனால் இ்ந்த வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் கரை சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு கருதி கனகர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

தடுப்புச்சுவர் இடித்து விழுந்தது

கோவிலுக்கு வரும் பக்தர்கள், வர்த்தகர்கள் நலன் கருதி திருவாரூர்- மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் டவுன் பஸ் மட்டுமே கமலாலயம் குளம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2022-ம் ஆண்டு பெய்த கனமழையால் திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறமாக உள்ள கமலாலய குளத்தின் தென்கரை தடுப்பு சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. இதனால் தென்கரையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் வல்லுனர் குழு கமலாலய குளத்தின் கரையினை ஆய்வு செய்து, குளத்தின் படித்துறை உள்ள கிழக்கு கரையை தவிர அனைத்து கரைகளின் தடுப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.

இதைத்தொடா்ந்து தென்கரையில் புதிய தடுப்பு சுவர் கட்டப்பட்டு வழக்கம் போல் மோட்டார் சைக்கிள்கள், கார் உள்ளிட்ட சிறுரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் கரையின் பாதுகாப்பு கருதி இதுவரை கனரக வாகனங்கள் இயக்கப்படாமல் உள்ளது.

விதிமுறைகளை மீறுகின்றனர்

தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் மார்க்கத்தில் இருந்து திருவாரூர் நகர் மற்றும் மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் வடகரை வழியாக செல்லாமல் இருக்க துர்க்காலயா ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில் எச்சரிக்கை பலகை, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மயிலாடுதுறை மார்க்கத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் வடகரை வழியாக செல்லாமல் இருக்க வடக்கு வீதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதைகள் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் வீதிமுறைகளை மீறி கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் வடக்கு கரையின் வழியாக சென்று வருகின்றன. இதனால் கரையின் உறுதித் தன்மை இழந்து பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.

கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை

திருவாரூரை சேர்ந்த தியாக சுந்தரம்:- கமலாலய குளத்தின் தெற்கு கரை மற்றும் மேற்கு கரை ஏற்கனவே மழையின் காரணமாக சரிந்துள்ளன. இதன் காரணமாகவே குளத்தின் கரையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக வடக்கு வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு கீழ வீதி வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் கமலாலய குளத்தின் வடகரை வழியாக நாள்தோறும் சென்று வருகின்றன.. இதனால் குளத்தின் கரையின் உறுதி தன்மை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. குளத்தின் வடகரையின் வழியாக தடையை மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கரைகளை பாதுகாக்க வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர் யோக வெங்கடேஷ் கூறுகையில், கமலாலய குளத்தின் கரையின் வழியாக எந்த ஒரு கனரக வாகனங்களும் செல்லக்கூடாது என்பதால் தான் துர்காலயா சாலையில் மற்றும் வடக்கு வீதியில் போலீசார் மூலம் கண்காணித்து வருகின்றனர். ஆனால் கனரக வாகன ஓட்டிகள் போலீசார் இல்லாத நேரங்களில் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக சென்று வருகின்றனர்.

கமலாலய குளத்தின் கரைகளில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்லாமல் இருக்க மின்வாரிய அலுவலகம் மற்றும், கோவிலின் மேற்கு வாசல் வடக்கு கரை அருகே உயர்மட்ட தடுப்பு (இரும்பிலான ஆர்ச்) அமைத்து கரைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story