ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

ஊழல் புகார் மனுவை திரும்ப பெறக்கோரி தாக்கிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் டிரைவர் மனு அளித்தார்.

வேலூர்

ஊழல் புகார் மனுவை திரும்ப பெறக்கோரி தாக்கிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் டிரைவர் மனு அளித்தார்.

குறை தீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.

புகார் அளித்தவர் மீது தாக்குதல்

கூட்டத்தில் காட்பாடி தாலுகா கொடுக்கந்தாங்கலை சேர்ந்த லாரி டிரைவர் வினோத்குமார் அளித்த மனுவில், நான் விண்ணம்பள்ளி ஊராட்சி செயலாளராக பணியாற்றிய சரவணன் மீது கொடுத்த ஊழல் புகாரின்பேரில் அவர் 5 புத்தூர் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி நான் கடைக்கு சென்றபோது சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் புகார் மனுவை வாபஸ் பெறக்கோரி என்னை கட்டையால் தாக்கி, பிளேடால் பல இடங்களில் அறுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

வேலூர் ராஜகுலத்தோர் பேரவை மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள எங்கள் சமுதாயத்தின் வண்ணார் (சலவை தொழிலாளி) என்ற பெயரை ராஜகுலத்தோர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

ஊரைவிட்டு தள்ளி வைத்து...

குடியாத்தம் தாலுகா தட்டப்பாறை மற்றும் சின்னயப்பல்லி சேர்ந்த யுவராஜ் தலைமையில் அவரது குடும்பத்தினர் அளித்த மனுவில், எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் சாமிக்கு வருகிற 13-ந் தேதி பூஜை செய்ய உள்ளோம். இதையொட்டி ஊர்கோவில் பூசாரி, வார்த்தியகாரர், சாமி உருவம் செய்பவர் உள்ளிட்டோரை குலதெய்வ வழிபாட்டுக்கு தேவையான வேலைகளை செய்து தரும்படி அழைத்தோம். அவர்களும் வருவதாக தெரிவித்தனர். ஆனால் எங்கள் ஊரில் கட்டபஞ்சாயத்து செய்து வரும் ஒருவர், நாங்கள் அழைத்த நபர்களிடம் சென்று குலதெய்வ பூஜையில் வேலை செய்ய கூடாது. அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம். இதனை மீறி பூஜைக்கு சென்றால் ஊரில் நடக்கும் எந்த விசேஷங்களுக்கும் உங்களை அழைக்க மாட்டேன் என்று மிரட்டி உள்ளார். அதன்காரணமாக அவர்கள் தற்போது பூஜை தொடர்பான வேலைக்கு வர மறுக்கிறார்கள். இதேபோன்று பலரிடம் அந்த நபர் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்து விட்டதாக கூறி எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க கூடாது என்று மிரட்டுகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கைத்தறி லுங்கி விற்பனை மையம்

பாட்டாளி மக்கள் கட்சி வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் குமார் தலைமையில் நிர்வாகிகள் பாலாஜி, ரமேஷ், முகமதுபாஷா அளித்த மனுவில், குடியாத்தம் பகுதியில் சுமார் 30 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. குடியாத்தம் பகுதி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் கைத்தறி லுங்கிகளை சங்கத்திடம் கொடுக்கிறார்கள். அவர்கள் தனியார் நிறுவனத்திடம் கொடுத்து அதற்கான கூலியை நெசவாளர்களிடம் வழங்குகிறார்கள். அந்த கூலி வாழ்வாதாரத்துக்கு போதுமானதாக இல்லை. எனவே குடியாத்தம் பகுதியில் கைத்தறி லுங்கி விற்பனை மையம் அமைத்தால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் குடியாத்தம் நகரில் அரசு மருத்துவமனை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடியாத்தம் நேதாஜிசவுக் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பெரியார்நகரை சேர்ந்த மூதாட்டி சீத்தாம்மாள் அளித்த மனுவில், எனக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் தற்போது நான் எனது 2-வது மகன் மற்றும் மகள் ஆகியோரின் பராமரிப்பில் உள்ளேன். வேலூரை அடுத்த காட்டுப்புத்தூரில் எனது பெயரில் உள்ள சொத்துகளை மூத்தமகன் போலியான ஆவணங்களை தயார் செய்து பாகப்பிரிவினை செய்ய விடாமல் மிரட்டி வருகிறார். அந்த சொத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

கூட்டத்தில், ஸ்மார்ட் ரேஷன்கார்டு உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வழங்கினார்.


Next Story