இந்து மக்கள் கட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


இந்து மக்கள் கட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமாவளவன் குறித்து அவதூறு: இந்து மக்கள் கட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:போலீஸ் சூப்பிரண்டிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகையை அடுத்த நாகூர் பகுதியை சேர்ந்த இந்து அமைப்பின் நிர்வாகி தங்க முத்து கிருஷ்ணன் என்பவரது மனைவி தங்கம் அம்மாள் கடந்த 1995-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நாகூரில் நடந்தது. கூட்டத்தில் சிவசேனா, இந்து மக்கள் கட்சி, இந்து தேசிய கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் திரண்டனர். அப்போது இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் அங்கு வந்தனர். பின்னர் இருதரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அர்ஜுன் சம்பத் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் சென்ற நிலையில், அங்கிருந்த போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கை சந்தித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.


Next Story