குறைதீர்வு கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


குறைதீர்வு கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

குறைதீர்வு கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் சுகுமாறன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது விவசாயிகள் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதியின்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் பணிகள் பாதிப்பு அடைகிறது. மூட்டைகளை தைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விவசாயிகளே பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நிலங்களை அளப்பதற்கு ரூ.800 கட்டணமாக வசூலிக்கின்றனர். இந்த தொகை அதிகமாக உள்ளது. இனி வருங்காலங்களில் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் பாமர ஏழைகள் பாதிப்பு அடைகின்றனர். எனவே நில அளவைக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதால் அவற்றை சீரமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது போல் விவசாயிகளுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அனைத்து அதிகாரிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story