பல லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


பல லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

இரட்டிப்பு பணம், நிலம் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த தனியார் நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

வேலூர்

தனியார் நிதிநிறுவனம்

வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலூர் சங்கரன்பாளையத்தில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர். அதில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தின் கிளைகள் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பல பகுதிகளில் இயங்கின.

இந்த நிதி நிறுவனத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை சில மாதங்கள் செலுத்தினால் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் தருவதாகவும் நிறுவன ஊழியர்கள் மற்றும் முகவர்கள் கூறினர்.

அதன்பேரில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தினோம். அதற்கு ரசீது மற்றும் பத்திரம் வழங்கினார்கள். இரட்டிப்பு பணம் தருவதை நம்பி பொதுமக்கள் பலர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி உள்ளோம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

5 ஆண்டுகளுக்கு பின்னர் ரசீது மற்றும் பத்திரத்தை நிதிநிறுவனம் மற்றும் முகவர்களிடம் கொடுத்து அவர்கள் தெரிவித்த பணத்தை கேட்டோம். அப்போது நிதிநிறுவன ஊழியர்கள் பணத்துக்கு பதிலாக நிலம் தருவதாக கூறினர். ஆனால் அதனையும் தராமல் காலம் கடத்தி ஏமாற்றி வந்தனர். இந்த நிலையில் நிதிநிறுவன அலுவலகம் மூடப்பட்டுள்ளது. எனவே அந்த நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி கூறுகையில், இந்த நிதிநிறுவனத்தின் மீது ஏற்கனவே பலர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிந்து கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. உங்களின் மனுக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்படும். கோர்ட்டு மூலம் அனைவருக்கும் உரிய பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story