கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் மனு
கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை
மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி ராக்கியாபாளையத்தை சேர்ந்த தினேஷ்ராஜ் (வயது 29) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
நான் சம்பவத்தன்று கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, எனது செல்போனில் வாய்க்காலை படம் எடுத்தேன். இதைப்பார்த்த அதேபகுதியை சேர்ந்த 2 பேர் தங்கள் தோட்டத்தை படம் எடுத்ததாக நினைத்து என்னை தகாத வார்த்தையால் திட்டி, எனது செல்போனை பிடுங்கி வீசி விட்டனர். மேலும் அவர்கள் என்னை கீழே தள்ளி காலால் எட்டி உதைத்தும், தென்னை மட்டையாலும் அடித்தனர். இதை தடுத்த எனது தாயையும் அவர்கள் கீழே தள்ளி விட்டு தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதைத்தொடர்ந்து காயம் அடைந்த நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். பின்னர் இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே உரிய விசாரணை நடத்தி, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.