குப்பைகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெங்களாபுரம் ஊராட்சியில் குப்பைகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் தூய்மையான ஊராட்சியாக மாற்றப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர்- திருவண்ணாமலை மெயின் ரோடு அருகே வெங்களாபுரம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் டிராக்டர்களில் நள்ளிரவில் குப்பைகளை கொண்டு வந்து மர்ம நபர்கள் கொட்டி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா உதயகுமார் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திடீரென குப்பை கொட்டிய பகுதியில் குவிந்தனர்.
அவர்கள் கூறுகையில் வெங்களாபுரம் ஊராட்சியில் தினமும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மர்ம நபர்கள் குப்பைகளை இந்த பகுதியில் கொட்டி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக குப்பைகள் கொட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
திருப்பத்தூர் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, புகாராக எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினர். அதன்பேரில் புகார் எழுதிக் கொடுத்து விட்டு சென்றனர்.