திருச்சி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
தவறிழைத்தவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையை பெற்றுத்தரவும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆளும் தி.மு.க. வை சேர்ந்தவர்களே திருச்சியில் உள்ள காவல் நிலையத்திற்குள் சென்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் அங்குள்ள பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த வன்முறையில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் இருந்த நாற்காலிகள், இருசக்கர வாகனம், கார் கண்ணாடி ஆகியவை சேதப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அளவுக்கு வன்முறை நடைபெற்றும், காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் வாய் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும் போது அவரது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லையோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது. தவறிழைத்தவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையை பெற்றுத்தரவும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.