'வாழ்வாதாரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்'-பொதுமக்களின் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்க வேண்டாம்-சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்


வாழ்வாதாரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்-பொதுமக்களின் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்க வேண்டாம்-சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
x

‘பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும’் என்று சேலத்தில் 2-வது நாளாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சேலம்

2-வது நாளாக ஆய்வுக்கூட்டம்

'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் உள்பட 4 மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். மேலும், விவசாயிகள், தொழில் துறையினர், மகளிர் சுயஉதவிக்குழுவினர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர்

இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வுக்கூட்டம் மதியம் 1.30 மணி வரை நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

ஓர் அரசு ஏன் இயங்குகிறது? அரசு அதிகாரிகளின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சட்டங்களும், திட்டங்களும் எதற்காக வகுக்கப்படுகின்றன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்கும்போது நமக்கு கிடைக்கும் ஒரே பதில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் என்பது மட்டுமே. இங்கு அனைவரும் அமர்ந்து நேரத்தை செலவழித்து ஆய்வு செய்வது, மக்களுக்கான நமது பொறுப்பை, கடமையை சரியாக செய்கிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவும். தொய்வாக உள்ள பணிகளை சரி செய்து சீர்திருத்திக் கொள்ளவும் தான்.

காகிதங்களாக பார்க்காமல்...

மக்கள் தங்களது குறைகளையும், தேவைகளையும் இந்த அரசு தீர்த்து விடும் என்ற நம்பிக்கையில் அவற்றையெல்லாம் மனுக்களாக நம்மிடத்தில் வழங்குகிறார்கள். அவற்றை நாம் வெறும் காகிதங்களாக பார்க்க வேண்டாம். ஒருவரின் வாழ்வாதாரமாக, எதிர்காலமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தான் இதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி 'முதல்வரின் முகவரி' என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களாட்சி தத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இந்த அரசு, அவர்களின் குறைகளை தீர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். பட்டா மாறுதல் தாமதமின்றி, எந்த அலைக்கழிப்பும் இன்றி நடைபெறுவதை மாவட்ட கலெக்டர்களும், மாவட்ட வருவாய் அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.

பெரிய திட்டங்களை மக்களுக்காக அரசு நிறைவேற்றி வரும் வேளையில், மக்களுக்கு தேவையான இதுபோன்ற அடிப்படையான அரசு சேவைகள் வழங்கப்படுவதில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத்தராது. ஆகவே, அதில் கவனமாகப் பணியாற்றுங்கள்.

சார்நிலை அலுவலர்களை ஆய்வு செய்யுங்கள். தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணியுங்கள். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.

வேளாண் உற்பத்தி

இருக்க வீடு, நடக்க சாலை, குடிக்க தண்ணீர், இரவில் தெருவிளக்கு, படிக்க பள்ளி, கிராம சுகாதாரம் - இதைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவற்றை தரமாக வழங்குவதில் என்ன சிரமம் இருந்தாலும் அவற்றை தீர்த்து முன்னேற்றம் காண வேண்டும். நீங்கள் தான் அரசினுடைய முகமாக மாவட்டத்தில் பணியாற்றக்கூடியவர்கள். உங்கள் திறமையில் தான், கடின உழைப்பில் தான், உங்கள் மாவட்ட மக்களுடைய உயர்வை காணமுடியும். எனவே, இதனை மறவாது கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

அடுத்து முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது வேளாண் உற்பத்தி. மதிப்புகூட்டல் மற்றும் உழவர் உற்பத்தி குழுக்கள் பற்றியதாகும். நேற்றைய தினம் நான் இந்த 4 மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு துறை பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினேன். அப்போது, விவசாயிகள், சிறுதானிய உற்பத்தியாளர்கள் மற்றும் மதிப்புகூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சில முக்கியமான கருத்துகளை தெரிவித்தனர். அவற்றை அரசு வேளாண்மை துறை செயலாளரும், மாவட்ட அளவில் கலெக்டரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

முன்னுரிமை

விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இந்த அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வு வளமானால்தான், மாநிலம் வளரும், அது வளம் பெற்றதாக கருதப்படும். எனவே, வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளித்திடுங்கள். இந்த 4 மாவட்டங்களில் சேலம், ஓசூர் ஆகிய வேகமாக வளரக்கூடிய 2 மாநகராட்சிகள் மற்றும் பல நகராட்சி பகுதிகள் உள்ளன.

இங்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருவதால் மக்கள் தொகை உயர்வும் காணப்படுகிறது. இது நகராட்சிகள் வழங்கும் சேவைகளின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்துகிறது. எனவே, அடிப்படை பணிகளில் குறிப்பாக குப்பைகளை விரைந்து அகற்றுதல், கழிவு நீர் தேங்காமல் தூர் வாருதல், பழுதான சாலைகளை சீர் செய்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

இதேபோல், கல்வி, சுகாதாரம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்டு வரக்கூடிய திட்டங்களை கவனமாக ஆய்வு செய்து, உங்கள் மாவட்ட மக்கள் பயன்பெறச் செய்ய வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கான வீட்டுவசதி, தொழில் முனைவோர் திட்டங்கள், கல்வி உதவித்தொகை வழங்குதல், பள்ளி கல்லூரி விடுதிகள் ஆகிய பலவற்றிலும் சார்நிலை பணியை கண்காணிக்க வேண்டும்.

சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் வரக்கூடிய அரசு திட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளாமல், உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைந்திட வேண்டும். அதோடு மட்டுமின்றி குறைகள் களையப்பட்டதையும் பதில் செய்தியாக அதே ஊடகத்திற்கு நீங்கள் அளிக்க வேண்டும். இது மிக மிக முக்கியமாக நீங்கள் உங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களை பல்வேறு தேவைகளுக்காக நாடிவரும் மக்களிடம் நீங்கள் ஒவ்வொருவரும் கனிவாக, பொறுமையாக நடந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும்.

மக்கள் நலன் கருதியே..

உதாரணமாக, ஒரு தாசில்தார் அலுவலகத்துக்கு ஏதேனும் ஒரு தேவைக்கு ஒருவர் வரும் போது, அங்கு அவர் எதற்காக வந்துள்ளார்? அதை யார் செய்வார்? அதற்கான மனு விவரங்களின் தேவை என்ன? ஆகியவை குறித்து பதில் கூற தற்போது யாரும் இல்லை என நினைக்கிறேன். இதனை சரி செய்ய வேண்டும். காவல்துறையில் வரவேற்பாளர் என்ற அமைப்பு போலீஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள பிற துறைகளும் மேற்கொள்ளலாம்.

நான் ஏற்கனவே கூறியபடி மக்கள் நலன் கருதியே அனைத்துத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை காலத்தே செய்யுங்கள். செய்தும் வருகிறீர்கள். இன்னும் சிறப்பாக பணியாற்றுங்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை திரும்பினார்

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், ஆர். காந்தி, மதிவேந்தன், தலைமைச்செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச்செயலாளர் பிரபாகர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், மாவட்ட கலெக்டர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா சிங் (நாமக்கல்), தீபக் ஜேக்கப் (கிருஷ்ணகிரி), சாந்தி (தர்மபுரி) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக ஆய்வுக்கூட்டத்தை நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 2 மணியளவில் காரில் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு புறப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து தனிவிமானம் மூலம் சென்னை திரும்பினார்.


Next Story