கோச்சடையில் மீன் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வேண்டாம் என்றும், கோச்சடையில் மீன் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வேண்டாம் என்றும், கோச்சடையில் மீன் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
அ.தி.மு.க. பாராட்டு
மதுரை மாநகராட்சி கூட்டம், அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியவுடன், மண்டல தலைவர்கள் பேசினர். அதன்பின் ஒவ்வொரு கவுன்சிலர்களும் பேசினர். அப்போது அவர்கள் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு, பாதாள சாக்கடையில் அடைப்பு ஆகிவை குறித்து பேசினர். இதைதொடர்ந்து மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, மாநகராட்சி சுந்தராஜபுரம் உயர்நிலைப்பள்ளிக்கு கலைஞர் பெயரும், மேல்நிலைப்பள்ளிக்கு பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் பெயரும் வைக்க கல்விக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதனை அ.தி.மு.க. முழுமையாக வரவேற்கிறது.
அதேபோல் 72-வது வார்டில் உள்ள பள்ளிக்கு எம்.ஜி.ஆர். பெயரும், 82-வது வார்டில் உள்ள பள்ளிக்கு ஜெயலலிதா பெயரும் வைக்க வேண்டும். செல்லூர் பகுதியில் கபடி வீரர்களுக்கு மைதானம் அமைத்து தர வேண்டும். மேயர் இந்திராணி, கவுன்சிலரான எங்களை போல் அவரது வார்டில் சிறப்பாக மக்கள் பணி செய்கிறார். முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த கமிஷனர் முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணியில் முதல்கட்ட பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்து விடும் என்றார்.
40 அடி சாலை
58-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ஜெயராமன் பேசும் போது, கட்டிட வரைப்பட அனுமதியை விட கூடுதல் அளவு கட்டியவர்களுக்கு சொத்து வரியுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படுகிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும். கரிமேட்டில் உள்ள மீன் மார்க்கெட் மாட்டுத்தாவணியில் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டை கோச்சடையில் அமைக்க வேண்டும். புதிய மனைப்பிரிவுகளுக்கும் அனுமதி அளிக்கும்போது 40 அடி சாலை அதில் இருக்க வேண்டும்.
அதற்கு குறைவான அளவில் சாலை அமைத்தால் மனைப்பிரிவிற்கு அனுமதி தரக்கூடாது என்றார்.
அவரது கருத்துக்கு ஆதரவாக பல கவுன்சிலர்களும் கோச்சடையில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்றனர். அதே போல் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும் போது, இட நெருக்கடியான மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் அமைக்க கூடாது, வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்றனர்.