அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை
ஒன்றியக்குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் கூறினாா்.
மன்னார்குடி;
ஒன்றியக்குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் கூறினாா்.
ஒன்றியக்குழு கூட்டம்
மன்னார்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் வனிதா அருள்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதன் விவரம் வருமாறு:-
பாரதிமோகன் (தி.மு.க.) கிராமங்களில் அரசு சார்பில் குளம் வெட்டும் பொழுது வெட்டிய மண்ணை கொண்டு கரைகளை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி, எஞ்சியுள்ள மண்ணை அதே பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொது இடங்களில் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கூறி அனுமதி பெற்றுத் தர வேண்டும்.
கொள்முதல் நிலையம்
ஜெயக்குமார்(அ.தி.மு.க.): துளசேந்திரபுரம் சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும். மேல துளசேந்திரபுரம், உள்ளிக்கோட்டை ஆகிய பகுதிகளில் அங்காடிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும்.கோவில்வினோத்(அ.தி.மு.க.): கூப்பாச்சி கோட்டை பகுதியில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பயன் பெற்று வந்தனர். இதை தற்போது மூடிவிட்டனர். நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.டி.ஜி.மணிகண்டன்(அ.தி.மு.க.): அசேஷம் ஊராட்சி, மேல மறவக்காடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும். மேலும் மறவக்காடு அருகில் சாந்தமாணிக்கம் பகுதியில் இடுகாட்டுக்கு செல்லும் பாதையில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும்.செல்வம் (பா.ஜ.க): பரவாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சேரக்கூடிய குப்பைகளை தள்ளுவண்டி மூலம் உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நடவடிக்கை
கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் கூறியதாவது:-
அடுத்த முறை ஒன்றியக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கவுன்சில் மூலம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும். 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் வேலை இல்லாதவர்களுக்கு பலன் தரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட திட்டம். மழைக்காலம் முடிந்தஉடன் கோடை காலத்தில் எப்போதும் போல நூறு நாட்கள் வேலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உறுப்பினர்களின் கோரிக்கை அனைத்தும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் படிப்படியாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.