வெளிநாட்டில் இறந்த மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை


வெளிநாட்டில் இறந்த மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை
x

வெளிநாட்டில் இறந்த மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து அவருடைய மனைவி மனு கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

வெளிநாட்டில் இறந்த மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து அவருடைய மனைவி மனு கொடுத்துள்ளார்.

வெளிநாட்டில் சாவு

மணக்குடி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். நான் மிகவும் வறுமையில் வசித்து வருகிறேன். மேலும் நான் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக எனது கணவர் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாடு சென்றார். கடந்த 1-4-2023 அன்று மணக்குடியில் இருந்து புறப்பட்டு சவுதி அரேபியாவில் உள்ள கிசான் என்ற இடத்திற்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றார்.

அங்கு சென்று 4 மாதங்களே ஆன நிலையில் கடந்த 10-ந் தேதி அன்று தொழிலுக்கு செல்ல என்ஜினை சரிசெய்யச் சென்றுள்ளார். அந்த நேரம் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அங்கேயே படுத்து கிடந்துள்ளார். அவரை பார்த்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக எனக்கு தகவல் தெரிவித்தனர்.

உடலை மீட்டு வர வேண்டும்

எனவே எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு கொடுக்க வந்தபோது கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணியாளர் டனீஸ்டன் மற்றும் உறவினர்கள் உள்பட சிலரும் உடன் வந்திருந்தனர்.


Next Story