வரைபடத்தில் காணாமல் போன 512 மீனவ கிராமங்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை


வரைபடத்தில் காணாமல் போன 512 மீனவ கிராமங்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2023 12:30 AM IST (Updated: 10 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வரைபடத்தில் காணாமல் போன 512 மீனவ கிராமங்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகையில் அமைச்சர் ரகுபதி உறுதி அளித்தார்.

நாகப்பட்டினம்

மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வரைபடத்தில் காணாமல் போன 512 மீனவ கிராமங்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகையில் அமைச்சர் ரகுபதி உறுதி அளித்தார்.

குறைகேட்பு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே தங்கச்சி மடத்தில் வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மீனவர்கள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் குறைகேட்பு கூட்டம் நாகை மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

நிவாரணத்தொகை

கூட்டத்தில் நாகை மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டு, 'விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மீனவர் சமுதாயத்திற்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கடலோர ஒழுங்குமுறை சட்டத்தை மீனவர்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

குறைகளை நிவர்த்தி செய்ய...

மீனவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ராமநாதபுரம் தங்கச்சிமடத்தில் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் எதுவும் பேசப்படமாட்டாது. இந்த மாநாட்டில் மீனவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்ஏற்பாடாகவே மீனவ கிராமங்களில் கூட்டம் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீனவ சமுதாய மக்களிடம் குறைகளை கேட்டு, அதை முதல்-அமைச்சருக்கு தெரிவித்து நிவர்த்தி செய்யப்பட உள்ளது.

மீனவர்களின் பிரதான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

காணாமல் போன கிராமங்கள்

மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வரைபடத்தில் 512 மீனவ கிராமங்கள் காணாமல் போயுள்ளது. இது ஆச்சர்யமாக உள்ளது. 'சிட்டிசன்' என்ற திரைப்படத்தில் வரும் 'அத்திப்பட்டி' போல காணாமல் போன 512 மீனவ கிராமங்களையும் மீண்டும் வரைபடத்தில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாகைக்கு முதல்-அமைச்சர் வரும்போது மீனவ கிராமங்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story