கோவில்களில் புதிய தமிழ் புலவர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு
கோவில்களுக்கு புதிய தமிழ் புலவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அன்னைத் தமிழ் வழிபாடு குறித்து கோவில்களில் பணிபுரியும் புலவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். சுகிசிவம், சத்தியவேல் முருகனார் ஆகியோர் புலவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது தான் இந்த ஆட்சியின் தாரக மந்திரம். இது எல்லா நிலையிலேயும் தொடர வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் விருப்பம். கோவில்கள் மூலம் தமிழ் வழிபாட்டை வளர்ப்பதற்கும், தலபுராணம், தல வரலாறுகளைத் தொகுக்கவும், பக்தர்களுக்கு கோவில்களை பற்றிய விவரங்களை எடுத்துரைக்கும் பொருட்டும் 1997-ம் ஆண்டில் கோவில்களுக்கு தமிழ்ப் புலவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இடைப்பட்ட காலங்களில் அவர்கள் வேறு பல பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையை மாற்றி மேற்சொன்ன பணிகளை மட்டுமே செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சட்டத் திட்டங்களுக்குட்பட்டு கோவில்களுக்கு புதிய தமிழ் புலவர்களை நியமித்திடவும், ஏற்கனவே பணியில் இருக்கின்ற புலவர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கிடவும், முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இப்பயிலரங்கத்தில் விழா நாட்களில் தமிழில் வழிபாடு குறித்த சிறப்புகளை மக்களுக்கு விளக்கி சொல்லவும், அவற்றை பரப்புரை செய்யவும் ஏதுவாக புலவர்கள் தயார் செய்யும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.