அனுமதியின்றி மாடுவிடும் விழா நடத்தினால் நடவடிக்கை


அனுமதியின்றி மாடுவிடும் விழா நடத்தினால் நடவடிக்கை
x

வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மாடுவிடும் விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மாடுவிடும் விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் துணை கோட்ட காவல்துறை சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் 'ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, பாலசுப்பிரமணியம், நிர்மலா, ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து 'ஹெல்மெட்' அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 'ஹெல்மெட்' வழங்கியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக போலீசார் 'ஹெல்மெட்' அணிந்தபடி போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வழிகள் வழியாக சென்றது.

அபராதம் உயர்வு

அதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது-

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 51 இடங்கள் விபத்துகள் அதிகளவு ஏற்படும் இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

சாலை விதிகளை முறையாக பின்பற்றினாலே 75 சதவீத விபத்துகள் குறையும். சாலை விபத்துகளை மீறுபவர்களுக்கு அபராதம் 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மாடுவிடும்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மாடுவிடும் விழா வருகிற 28-ந்தேதி வரை நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அதை பின்பற்றி மாடு விடும் விழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாடு விடும் விழாக்கள் அனுமதியின்றி நடத்தினால் விழா குழுவினர் மீதும் மாடுகளை கொண்டுவருபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story